உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐந்து வகை வீதிமீறலுக்கு மட்டுமே அபராதம்: போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவு

ஐந்து வகை வீதிமீறலுக்கு மட்டுமே அபராதம்: போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவு

சென்னையில் விரட்டிப் பிடிக்காத குறையாக, வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். தினமும், 2,000 - 3,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பல இடங்களில் நான்கு, ஐந்து போலீசார் கும்பலாக நின்று, கெடுபிடி காட்டி வாகன ஓட்டிகளிடம் வசூல் நடத்தி வருவது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், ஐந்து விதமான விதி மீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போக்குரவத்து போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், 'ெஹல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டுதல், 'நோ - என்டரி' என அறிவிக்கப்பட்ட அனுமதி இல்லாத வழியில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இரு சக்கரத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்வதல் என, ஐந்து விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே, 25 வகையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, போக்குவரத்து உயர் அதிகாரிகள் கூறியதாவது: சாலை விபத்து, உயிரிழிப்புகளை தடுக்கும் வகையில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அபராதம் விதிப்பதில் சில தளர்வுகள் தரப்பட்டுள்ளது.அதேநேரம், ஆங்காங்கே விதிமீறலை கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து, அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடர்கிறது.அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து தடை செய்யப்பட்ட வழியில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை