உயிரிழந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் வழங்கிய கமிஷனர்
சென்னை, விபத்தில் இறந்த உதவி ஆய்வாளரிடன் குடும்பத்திற்கு, விபத்து காப்பீடு தொகை 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த, திருப்பத்துாரைச் சேர்ந்த தேசிங்குராஜன், 55, என்பவர், கடந்த ஆண்டு டிச., 10ம் தேதி, சாலை விபத்தில் சிக்கினார்.இதில் படுகாயமடைந்த அவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜன., 13ல் உயிரிழந்தார். இவருக்கு மனைவி ராஜலட்சுமி, ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர், ஆக்சிஸ் வங்கியில் காவல் துறையினருக்கான காப்பீடு திட்டத்தில் சேர்ந்து, சம்பள கணக்கை பதிவு செய்து கொண்டதால், அவருக்கு உரிய விபத்து காப்பீடு தொகை பெறுவதற்கான நடவடிக்கை, காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி நேற்று, ஆக்சிஸ் வங்கியின் விபத்து காப்பீடு தொகை 30 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, உயிரிழந்த தேசிங்குராஜன் குடும்பத்தினரிடம், போலீஸ் கமிஷனர் அருண் நேற்று வழங்கினார்.