விமான நிலையத்தில் ஆணைய தலைவர் ஆய்வு
சென்னை, சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும், இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனைய பணிகளை, விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் ஆய்வு செய்தார். சென்னை விமான நிலையத்தில், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, விமான நிலையத்தை, 2,467 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தும் பணிகள், இரண்டு கட்டங்களாக நடக்கும் என, ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக, 1,260 கோடி ரூபாயில், புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டு, 2021ல் செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, மூன்றாவது முனையத்தில், இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு காரணங்களால், இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ***