கமிஷனர் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் புகார்தாரர்கள் சிரமம்
சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால், புகார் அளிக்க வருவோர் சிரமப்படுகின்றனர். வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் 1.69 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு மார்ச் 6ல், அப்போதைய கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் திறந்து வைத்தார். இதில் குளிர்ந்த நீரும், வெந்நீரும் தனித்தனியே வழங்கப்பட்டதால் போலீசாருக்கும், புகார் தெரிவிக்க வரும் மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. தற்போது, குடிநீர் மையம் செயல்படாததால், போலீசார் மட்டுமின்றி புகார் தெரிவிக்க வரும் மக்களும், சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இங்குள்ள மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலக பகுதியில், கேன் குடிநீர் வழங்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என, புகார்தாரர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், கேன் குடிநீருக்கு தங்கள் சொந்த காசை செலவழித்து வருவதாக, அங்குள்ள போலீசாரும் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.