மனை உட்பிரிவு அனுமதியில் முறைகேடு என புகார்
தாம்பரம், வேங்கைவாசல் கிராமத்தில், விதிமுறையை மீறி, மனை உட்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மனு அளிக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், பத்து ரூபாய் இயக்கம் சார்பில், புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.அதன் விபரம்:செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளில், பொதுமக்கள் கட்டடம் கட்டுவதற்கும், மனை உட்பிரிவு பெறுவதற்கும் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.மனை உட்பிரிவுக்கு அனுமதி வழங்குவதில், ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.கிராம நத்தம் மனைகளில், இரண்டு குடியிருப்பு உடைய கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ.,வில் விதிமுறைகள் உள்ளன.ஆனால், கிராம நத்தம் மனைகளில் வணிக கட்டடம் மற்றும் மனை உட்பிரிவு வழங்குவதற்கு எந்த விதிமுறையும் இல்லை.அப்படியிருக்கையில், வேங்கைவாசல், கெங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள கிராம நத்தம் மனையில், அரசு விதிமுறைகளுக்கு மாறாக, ஆறு மனைகளாக உட்பிரிவு செய்து, ஒன்றிய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.