வீடு ஒப்படைக்க கால தாமதம் கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம்
சென்னை, குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்காததால் விதிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயை செலுத்தாத தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, மேலும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில், ஓசோன் புராஜக்ட்ஸ் நிறுவனம் சார்பில், 'மெட்ரோசோன்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில், வீடு வாங்க, பிரவின்குமார் ஜெயின் என்பவர் முன்பதிவு செய்தார். இதற்கான ஒப்பந்த அடிப்படையில், வீட்டுக்கான விலையாக பேசப்பட்ட தொகையை அவர் செலுத்தினார். ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக பிரவின்குமார் ஜெயின், ரியல் எஸ்டேட் ஆணையத்தின் முறையிட்டார். மனுவை விசாரித்த ஆணையம், கட்டுமான நிறுவனத்துக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், மனுதாரருக்கு மாற்று வீட்டை ஒதுக்க, கடந்த 2023, செப்., 13ல் உத்தரவிட்டது. இதன்படி, அந்நிறுவனம் அபராதம் செலுத்தவில்லை; மாற்று வீட்டையும் ஒப்படைக்கவில்லை என, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், மனுதாரர் மீண்டும் புகார் செய்தார். இந்த மனுவை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: ரியல் எஸ்டேட் ஆணையம், 2023ல் பிறப்பித்த உத்தரவை, தனியார் கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை. மனுதாரருக்கு அளிக்க மாற்று வீடு தயாராக உள்ளதாக கூறப்பட்டாலும், செப்., 30க்குள் வீட்டை ஒப்படைக்க வேண்டும். இதில், ஏற்கனவே விதிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் அபராதத்தையும் செலுத்தவில்லை. இதனால், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மொத்த தொகையையும், செப்., 30க்குள் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.