சி.எம்.டி.ஏ.,வில் 64 நாளில் கட்டுமான திட்ட அனுமதி
சென்னை:சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளை முடிப்பதற்கான கால அவகாசம், 180 நாட்களில் இருந்து, 64 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகரில், பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டுமான திட்டங்கள், மனை பிரிவுகளுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கி வருகிறது. திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்து, ஒப்புதல் கிடைக்க அதிக தாமதம் ஆவதாக புகார்கள் வந்தன. இதனால், கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி, புதிதாக வீடு வாங்குவோரும் பாதிக்கப்படுகின்றனர்; அரசுக்கு வருவாய் கிடைப்பதும் தாமதமாகிறது. இந்நிலையில், கட்டுமான திட்ட அனுமதி பணிகளை ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. கடந்த, 2021ம் ஆண்டு நிலவரப்படி, ஒரு விண்ணப்பத்துக்கு, கட்டுமான திட்ட அனுமதி கிடைக்க, 180 நாட்கள் ஆனது. இந்த கால அவகாசத்தை, 45 அல்லது 30 நாட்களாக குறைக்கும்படி, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. இருப்பினும், 60 நாட்களுக்குள் அனுமதி அளிக்கும் வகையில், நடைமுறைகள் மாற்றப்பட்டன. ஒற்றை சாளர முறை அமலுக்கு வந்த நிலையில், திட்ட அனுமதி நடைமுறைகளை முடிப்பதற்கான அவகாசம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மட்டுமின்றி, பிற துறை அதிகாரிகளும், ஆன்லைன் முறையிலேயே கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து வருகின்றனர். இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 2021ல் கட்டுமான திட்ட அனுமதி நடைமுறைகள் முடிய, 180 நாட்கள் ஆனது. தற்போது, 64 நாட்களாக குறைந்துள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் விரைவாக பணிகளை துவங்க முடியும். இந்த கால அவகாசத்தை மேலும் குறைக்கும் வகையில், பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
திட்ட அனுதி நிலவரம்
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், 2021 முதல் வழங்கப்பட்ட கட்டுமான மற்றும் மனைப்பிரிவு திட்ட அனுமதி எண்ணிக்கை மற்றும் கால அவகாச விபரம்: ஆண்டு / திட்ட அனுமதி / அவகாச நாட்கள்2021 / 693 / 180 2022 / 725 / 157 2023 / 1,012 / 107 2024 நவ., வரை / 907 / 64