உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்காக கோவில் நிலத்தை ரூ.18 கோடிக்கு வாங்குது மாநகராட்சி

பள்ளிக்காக கோவில் நிலத்தை ரூ.18 கோடிக்கு வாங்குது மாநகராட்சி

சென்னை:'மேற்கு மாம்பலத்தில் பயிலும் 2,500 மாநகராட்சி மாணவ - மாணவியரின் நலன் கருதி, 18.85 கோடி ரூபாயில் கோவில் நிலம் வாங்கப்பட உள்ளது. ஓரிரு நாளில் பத்திரப் பதிவு நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் பள்ளி சாலையில், மாநகராட்சி பள்ளி அமைக்க, பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 24,000 சதுர அடி நிலத்தை, வாடகை அடிப்படையில் மாநகராட்சி வாங்கியது. இந்த பள்ளியில், 2,500 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த இடத்திற்கு, 1969 முதல் வாடகை தரவில்லை என்று தேவஸ்தானம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சியிடம் இருந்து நிலத்தை வாங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி மேல் முறையீடு செய்தது. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து, மாநகராட்சிக்கு ௫ லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இறுதி விசாரணையின்போது, சதுர அடிக்கு வழிகாட்டு மதிப்பு 5,500 ரூபாய்; சந்தை விலை 10,701 ரூபாய் என, வருவாய் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சதுர அடிக்கு 7,800 ரூபாய் எனவும், நிலத்திற்கு, 18.85 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்தார். இதன்படி, கோவிலுக்கு சொந்தமான 24,000 சதுர அடி நிலத்தை வாங்க கடந்த ஜூலையில், தமிழக அரசின் அனுமதியை மாநகராட்சி பெற்றது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் ஓரிரு நாட்களில் பத்திரப்பதிவு முடிந்துவிடும் என, தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை