உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அறிக்கையோடு கடமையை முடிக்கும் மாநகராட்சி வளர்ப்பு நாய், தெரு நாய் விவகாரத்தில் அதிருப்தி

அறிக்கையோடு கடமையை முடிக்கும் மாநகராட்சி வளர்ப்பு நாய், தெரு நாய் விவகாரத்தில் அதிருப்தி

சென்னையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி முதல் பொதுமக்கள் வரை, வளர்ப்பு நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்கின்றன. பிரச்னை ஏற்படும்போது மட்டும் அறிக்கை விட்டு எச்சரிக்கும் மாநகராட்சி, தொடர் நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நுங்கம்பாக்கம் மாநகராட்சி பூங்காவில் பணியாற்றிய காவலாளியின், 5 வயது மகளை, வளர்ப்பு நாய்கள், 2024ல் கடித்து குதறின. தீவிர சிகிச்சை பெற்று சிறுமி மீண்டு வந்தார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி விழித்துக் கொண்டது. வளர்ப்பு நாய்களுக்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். நாயை வெளியே அழைத்து வரும்போது, சங்கிலியுடன், வாயை மூடியிருக்க வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில், மருத்துவ பணியாளர் தேர்வாணைய தலைவர் உமா மகேஷ்வரியை, பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்தது. மூன்று நாட்களுக்கு முன், ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த கருணாகரன் என்பவரை, அவரது பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட, 'பிட்புல்' ரக நாய் கடித்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, 2024ல் வெளியிடப்பட்ட அதே எச்சரிக்கை அறிக்கையை, சில மாற்றங்களை செய்து மீண்டும், நேற்று முன்தினம் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சம்பவத்தின்போது மட்டுமே அறிக்கை விடும் மாநகராட்சி, ஆக்ரோஷமான வளர்ப்பு நாய்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் மெத்தனம் காட்டுவதால், நாய்க்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில், 30,000க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இருக்கக்கூடும். ஆனால், 10,000 எண்ணிக்கையில்தான், உரிமையாளர்கள் தங்கள் நாய்களை மாநகராட்சியிடம் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய்களும் வளர்க்கப்படுகின்றன. இதுகுறித்து, மாநகராட்சி கால்நடை அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. சம்பவம் நடக்கும்போது மட்டும், மாநகராட்சி அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால்தான் இந்த சிக்கல் தீரும். இவ்வாறு அவர்கள்கூறினர். மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாய்கள் வளர்ப்போர் விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால், குற்றவியல் நடவடிக்கை வரை எடுக்க முடியும். அவற்றை செயல்படுத்த மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினோம். அனுமதி தர மறுத்துவிட்டனர். நாய்களை, பெரும்பாலும் வசதி படைத்தோர் வளர்ப்பது காரணமாக இருக்கலாம். கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் இணைந்து, வளர்ப்பு நாய்களை கணக்கெடுக்க, மாநகராட்சியில் தனி குழுவை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கணக்கெடுத்து முறைப்படுத்தினால்தான், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இவ்வாறு கூறினார். 10,167 தெரு நாய்களுக்கு தடுப்பூசி தாம்பரம் மாநகராட்சியில் 45,000 தெரு நாய்கள் மற்றும் 5,000 வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளன. இந்நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக., 6ம் தேதி துவங்கியது. மாநகராட்சி பொது சுகாதாரத் துறை - கால்நடைத் துறை இணைந்து, முகாமை நடத்தி வருகின்றன. சிட்லப்பாக்கம் கால்நடை மருத்துவமனையில் நடந்து வரும் முகாமில், நேற்று வரை 10,167 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ