கவுன்சிலர் மிரட்டுவதாக மாநகராட்சி ஊழியர்கள் புகார்
சென்னை, சென்னை மாநகராட்சியில், சாலையில் திரியும் மாடுகளை பிடிப்போரை, கவுன்சிலர் சாரதா மிரட்டுவதாக, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி அனைத்துத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மாநகராட்சி கமிஷனருக்கு தரப்பட்ட புகார் விபரம்:திரு.வி.க.நகர் மண்டலம், 65வது வார்டில் கடந்த 19ம் தேதி, மூன்று மாடுகள் பிடிக்கப்பட்டு, தொழுவத்தில் அடைக்கப்பட்டன.அந்த மாடுகளுக்கான அபராதத் தொகையை செலுத்திய பின், அவற்றின் உரிமையாளர், மீட்டு சென்றார். சில தினங்களில், அதில் ஒரு மாடு இறந்துவிட்டது.மாடு இறந்ததற்கு மாடுபிடி ஊழியர்கள் தான் காரணம் எனக்கூறி 65வது வார்டு கவுன்சிலர் சாரதா, மாடுபிடி ஊழியர்களை மிரட்டி வருகிறார்.மாடு பிடிக்கும் போது மாடு நோய்வாய்பட்டிருந்தால் மருத்துவ அதிகாரியின் அறிவுரைப்படி மாட்டை விடுவிப்பர். ஆனால், மாடு இறந்தததற்கு ஊழியர்கள் தான் காரணம் எனக்கூறி கவுன்சிலர் மிரட்டுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.