மழையால் பல்லாங்குழியான மாநகராட்சி சாலைகள்
அனகாபுத்துார், நவ. 28-தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், அனகாபுத்துார், பம்மல் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. உட்புற சாலைகளில், பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டவுடன் அச்சாலைகளை, ஒப்பந்ததாரர்கள் முறையாக மூடுவதில்லை.சில நாட்களில், அச்சாலைகளில் மரண பள்ளங்கள் ஏற்பட்டு, நடந்து செல்வோர்கூட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோரின் நிலைமையோ மோசம்.மற்றொரு புறம், லேசான மழை பெய்தால், இந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிடுகின்றன.அந்த சேற்றிலேயே நடந்தும், வாகனங்களிலும் சென்று வருவோரும், சேற்றில் வழுக்கி விழும் சம்பவம் நடக்கிறது.இந்த நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையில், அனகாபுத்துாரில் உள்ள குருசாமி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, அண்ணா தெருக்களில் நடக்கவே முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறியுள்ளது.இத்தெருக்களில் வசிப்போரின் நலனில் அக்கறை செலுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
புகார் அளிக்க வசதி
மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, சென்னையில் 372, காஞ்சிபுரத்தில் 1,137, திருவள்ளூரில் 1,985, செங்கல்பட்டில் 1,306 கி.மீ., என மொத்தம், 4,801 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.இந்த நான்கு மாவட்ட சாலைகளை, சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவினர் பராமரித்து வருகின்றனர்.வடகிழக்கு பருவ மழை காலங்களில், இச்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவதும், அதனால், பள்ளம் உள்ளிட்ட சேதம் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மழையால் சேதம் அடையும் இந்த சாலைகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பொது மக்கள், 93817 38585, 99520 75411 என்ற மொபைல் போன் எண்களில், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக புகார் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளுக்கு புகார் அளிக்க, நெடுஞ்சாலைத் துறையை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.