உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

பெண் ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு செம்பியம்: பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுணா, 31; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் பணிக்கு சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த வாலிபர், சுகுணாவின் மொபைல் போனை பறித்து சென்றார். செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைக்கடையில் திருடிய பெண்களுக்கு வலை கொடுங்கையூர்: கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில், நகைக்கடை நடத்தி வருபவர் சேத்தன், 27. இவரது கடைக்கு, நேற்று முன்தினம் இரவு இரண்டு பெண்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால், நகை ஏதும் வாங்கவில்லை. நள்ளிரவில் சேத்தன் கணக்குகளை சரிபார்த்தபோது, இரண்டு வளையல்கள் திருட்டு போனது தெரிய வந்தது. கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிரைம் கார்னர் மொபைல்போன் சர்வீஸ் கடை பூட்டை உடைத்து ரூ. 10,000 திருட்டு கொடுங்கையூர்: கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ராஜா, 50. இவர், வீட்டின் அருகே மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார். இவர், தனது கடையை நேற்று முன்தினம் இரவு மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின், நேற்று கடையை மீண்டும் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையினுள் இருந்த கல்லாப்பெட்டியில் இருந்து, 10,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின்படி, கொடுங்கயூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மதுபோதையில் தகராறு செய்த வாலிபர்கள் கைது செம்பியம்: பெரம்பூர், முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார், 58 ; ரயில்வே ஊழியர். இவரது வீட்டின் அருகே, மதுபோதையில் சிலர் நேற்று முன்தினம் இரவு சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சிவக்குமார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிவக்குமாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, அவரது விட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். மேலும், அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார். இது குறித்து செம்பியம் போலீசில் சிவக்குமார் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதன்படி, அம்பத்தூர், சிவபிரகாசம் நகரைச் சேர்ந்த சஞ்சய், 24 மற்றும் ஆகாஷ், 22, ஆகியோரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். ஹார்டுவேர் கடையில் ரூ.1.5 லட்சம் பொருட்கள் திருட்டு கடை ஊழியர்கள் இருவர் கைது வானகரம்: வானகரத்தில் ஹார்டுவேர் கடையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை சிறுகச் சிறுக திருடி விற்பனை செய்த கடை ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். வானகரம் கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் 38. இவர் தனது வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கட்டுமானப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த ஆனந்தகுமார் 36, ஆந்திர மாநிலம் சித்துாரைச் சேர்ந்த நிஜாமுதின், 26 மற்றும் பாஸ்கர் ஆகிய மூவரும் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்கள் குறைந்து வருவதை அறிந்த லோகேஷ், கணக்குகளை சரிபார்த்தார். அப்போது, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, வானகரம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆனந்தகுமார், நிஜாமுதின் மற்றும் பாஸ்கர் ஆகியோர் சேர்ந்து கடையில் இருந்து கட்டுமானப் பொருட்களை சிறுகச் சிறுக திருடி, வெளியில் விற்பனை செய்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்தகுமார், நிஜாமுதின் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள, குழாய் இணைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 கிலோ கட்டுமானப் பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் மீட்கப்பட்டன. தலைமறைவாக உள்ள பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுவனை தாக்கி மொபைல் போன் பறிப்பு வெங்காயக் கடை ஊழியர்கள் மூவர் கைது கோயம்பேடு: கோயம்பேடு சந்தை அருகே, 14 வயது சிறுவனை தாக்கி மிரட்டி, மொபைல் போனை பறித்துச் சென்ற வெங்காயக் கடை ஊழியர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு சந்தை பகுதியில் வசிப்பவர் வசந்தா 60. இவர், தனது 14 வயது பேரனுடன் தங்கி, சந்தையில் துாய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 20ம் தேதி இரவு, இவரது பேரனிடம் சந்தையில் உள்ள வெங்காயக் கடையில் வேலை செய்யும், ஏற்கனவே அறிமுகமான மூவர் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, திடீரென சிறுவனை கையால் தாக்கி மிரட்டி, அவனிடம் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். அதன் படி மொபைல் போன் பறித்த விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த வெயிலுமுத்து 23, ராஜ்குமார், 26 மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த தேவேந்திரன், 28 ஆகிய மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !