கிரைம் கார்னர்
மதுக்கூடத்தில் தகராறு: ரவுடி கைது வில்லிவாக்கம்: வில்லி வாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி 'கருப்பு' திவாகர், 26; பழைய குற்றவாளி. நேற்று முன்தினம் இரவு, நியூ ஆவடி சாலையில் உள்ள 'டாஸ்மாக்' அருகில் மதுக்கூடத்திற்கு திவாகர் வந்துள்ளார். மதுபாட்டில் கேட்டு, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளரிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து தப்பினார். வில்லிவாக்கம் போலீசார், கருப்பு திவாகரை நேற்று கைது செய்தனர். நெஞ்சு வலியால் அரசு அலுவலர் இறப்பு அண்ணா நகர்: அண்ணா நகர், சாந்தி காலனி டி.என்.எச்.பி., 7வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 54; கண்காணிப்பாளர். சாந்தோம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்தார். நேற்று மதியம் 1:00 மணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சந்திரசேகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வாலிபருக்கு 'குண்டாஸ்' காஞ்சிபுரம்: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 27; இவர், 'ஆன்லைன்' மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். புழல் சிறையில் உள்ள சரத்குமாரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர் .