உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

ஓட்டேரி போலீசாரை தாக்கிய போதை ஆசாமிகள் மூவர் கைது ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் கலாட்டாவில் ஈடுபட்டுள்ள மூவரை, ஓட்டேரி காவல் நிலைய போலீசார் சக்திவேல் மற்றும் பவித்ராஜா ஆகியோர் கண்டித்துள்ளனர். போதை ஆசாமிகள், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். விசாரணையில், புளியந்தோப்பு சுரேஷ், 26, செவ்வாய்பேட்டை கவுதம், 27 மற்றும் ஓட்டேரி முஸ்தபா, 26 என்பது தெரிய வந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர். மேற்கு தாம்பரம் ரவுடியை வெட்டியோருக்கு வலை தாம்பரம்: மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சீனி முகமது, 32; தாம்பரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆறு பைக்குகளில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் சீனி முகமதுவை கத்தியால் வெட்டினார். காயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர். தி.மு.க., பிரமுகரின் 16 வயது மகனுக்கு வெட்டு கே.கே.நகர்: அசோக் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 44; கே.கே.நகர் 135வது வார்டு தி.மு.க., வட்டச்செயலர். இவரது மகன் தக் ஷன் குமார், 16; பிளஸ் 1 மாணவர். இவர், நேற்று முன்தினம், கே.கே.நகர் 10வது செக்டார் 61வது தெருவில் உள்ள பூங்காவில் பட்டாசு வெடித்துள்ளார். அங்கு போதையில் வந்த ஏழு பேர் கும்பல், தக் ஷன் குமாரிடம் வீண் தகராறு செய்து தாக்கி, முதுகில் வெட்டி தப்பியுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே.நகரைச் சேர்ந்த சதீஷ், 20 மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கார் கண்ணாடி சூறை போதை இளைஞர்கள் கைது செங்குன்றம்: புழல், திருவள்ளுவர் தெருவில் இரு தினங்களுக்கு முன், போதை இளைஞர்கள் கார், ஒரு வேன் உட்பட ஏழு வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீசாரின் விசாரணையில், புழல் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாந்த், 19, கிஷோர், 19, ரிஷிகுமார், 23 விஷ்ணு, 19 ஆகியோர் மது மற்றும் கஞ்சா போதையில் வாகனங்களின் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. விசாரித்த போலீசார், நால்வரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அசாம் வாலிபர்களை தாக்கியோர் கைது வேளச்சேரி: வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் உசேன், 23 மற்றும் தில்தார், 23. இருவரும், நேற்று முன்தினம், வேளச்சேரி, லட்சுமிபுரம் வழியாக நடந்து சென்றபோது, போதையில் வந்த, அதே பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன், 26, யுவராஜ், 28, உட்பட ஐந்து பேர், வீண் தகராறு செய்து தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரித்த வேளச்சேரி போலீசார், ஐந்து பேரையும் கைது செய்தனர். அமைந்தகரையில் வழிப்பறி ஓட்டேரி வாலிபர்கள் கைது அமைந்தகரை: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 19; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 19ம் தேதி நள்ளிரவு, நண்பருடன் அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த இருவர், அவரை தாக்கி மொபைல்போனை பறித்து தப்பினர். அமைந்தகரை போலீசாரின் விசாரணையில், ஓட்டேரியைச் சேர்ந்த ராமன், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த டேவிட், 24 ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெண்ணிடம் கைப்பை பறித்த சிறுவன் உட்பட 2 பேர் கைது புழல்: புழல், லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிதா, 45. சென்னை மாநகராட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளர். இவர், நேற்று முன்தினம் பணி முடித்து, புழல் சைக்கிள் ஷாப் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், சுமிதாவிடம் இருந்த 11,000 ரூபாய், மொபைல்போன் அடங்கிய கைப்பையை பறித்துச் சென்றனர். விசாரித்த புழல் போலீசார், திருட்டில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ், 19, 17 வயது சிறுவனை கைது செய்தனர். பட்டாசு வெடித்ததில் தகராறு வாலிபரின் மண்டை உடைப்பு கொடுங்கையூர்: கொடுங்கையூர், கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர் தன் நண்பர்களான பசுபதி, ஆனந்த் குருபாலன் ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு வீட்டருகே பட்டாசு வெடித்தார். அப்போது, பைக்கில் வந்த மோகன்ராஜ், ரவிகுமார் ஆகியோர் மீது தீப்பொறி பட்டதால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ரவிகுமார் மண்டை உடைந்து, மூன்று தையல் போடப்பட்டுள்ளது. கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ