கிரைம் கார்னர்
6 வயது மகளை கொன்றவருக்கு 'குண்டாஸ்'
ஓட்டேரி: அயனாவரத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 35. இவரது மனைவி ரெபேக்கா, 26. கடந்த ஜூலை 20ம் தேதி தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், 6 வயது மகளை சதீஷ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில், சதீஷை மவுண்ட் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த சதீஷ், ரெபேக்கா மற்றும் அவரது சகோதரிக்கு, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். விசாரித்த ஓட்டேரி போலீசார், சதீஷை கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மாயமான பள்ளி மாணவி மீட்பு
கண்ணகி நகர்: துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்தவர் இன்பராஜ், 35. இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர்களின் மகள் இவாஞ்சலினா, 11; ஆறாம் வகுப்பு மாணவி. இந்த நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இவாஞ்சலினா மாயமானார். கண்ணகி நகர் போலீசாரின் விசாரணையில், சிறுமி அவரது உறவினர் வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக உறவினர் வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது. அவரை மீட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பொதுப்பணி துறை ஊழியர் மர்ம மரணம்
ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகன், 58; பொதுப்பணித்துறை அலுவலக டிரைவர். வெள்ளானுார் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திய முருகன், அருகே படுத்திருந்தார். நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், முருகனை எழுப்பினர். அவர் சுயநினைவின்றி கிடந்ததால், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவசர கால 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
'டாஸ்மாக்' அருகே ஆண் சடலம் மீட்பு
திருவொற்றியூர்: திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் சந்திப்பு டாஸ்மாக் கடை அருகே, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த முரளி, 28 என்பவர், தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலையில் தீக்கிரையான பைக்
சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நோவா, 20. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்' விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில், 'பஜாஜ் பல்சர் 220' பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது, அவரது வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. சாலையோரம் நிறுத்தி பார்த்தபோது, வாகனம் தீப்பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அனைத்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். பா.ஜ., பிரமுகர் தற்கொலை
வானகரம்: வானகரம், கந்தசாமி நகரை சேர்ந்தவர் கவுதம், 46; பா.ஜ., மதுரவாயல் மேற்கு மண்டல செயலர். நேற்று முன்தினம் இரவு தன் அறைக்குள் சென்றவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வானகரம் போலீசார் நடத்திய விசாரணையில், குடி பழக்கமுள்ள அவர், கடன் பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். 6 மொபைல் போன்கள் திருட்டு
பெரம்பூர்: பெரம்பூர், சுப்பிரமணியன் தெருவில் கட்டுமான பணி தளத்தில் மோகன் பாலாஜி, 28, என்பவர் மேலாளராக பணிபுரிகிறார். இங்கு, முகமது அன்சுர் அலி, சாபூல் உட்பட வடமாநில தொழிலாளர்கள் ஆறு பேர் பணிபுரிகின்றனர். நேற்று காலை ஆறு மொபைல்போனும் திருடு போயிருந்தன. இதுகுறித்து மோகன் பாலாஜி நேற்று மதியம் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மூதாட்டியிடம் 2 சவரன் நகை 'அபேஸ்' திரு.வி.க.நகர்: திரு.வி.க.நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த நஜிமுனிஷா, 75 என்ற மூதாட்டி, நேற்று காலை 11:00 மணியளவில் வீனஸ் மார்க்கெட் அருகே உள்ள இந்தியன் வங்கிக்கு வந்து பணம் எடுத்து வீட்டுக்கு சென்றார். தீட்டித்தோட்டம் அருகே மர்ம நபர்கள் இருவர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 2 சவரன் நகையை பறித்து சென்றனர். 5 சவரன் நகை திருடியவர் கைது
திருமுல்லைவாயல் : திருமுல்லைவாயல், தேவி நகரைச் சேர்ந்தவர் மும்தாஜ், 55. கடந்த 3ம் தேதி, அவரது வீட்டு மாடியில் போடப்பட்டு இருந்த தகர கொட்டகை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பாண்டேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு, 28 என்பவர், பீரோவில் இருந்த 5 சவரன் நகையை திருடி சென்றார். விசாரித்த திருமுல்லைவாயல் போலீசார், ஹரிபாபுவை நேற்று கைது செய்து நகையை மீட்டனர். மாமியாரை தாக்கிய மருமகன் கைது
வண்ணாரப்பேட்டை: மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதி, 20. இவரது மனைவி ஸ்ரீமதி. ஆதியின் மதுபழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆதி மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீமதியை பார்ப்பதற்காக அவரது தாய் இந்துமதி வீட்டிற்கு வந்துள்ளார். ஆத்திரமடைந்த ஆதி, மாமியார் இந்துமதியை கத்தியால் தாக்கியுள்ளார். விசாரித்த போலீசார், ஆதியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.