உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

தாயை கடத்த முயன்ற மகளுக்கு 'காப்பு' கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள், 62. தன் வீட்டின் மூன்றாவது தளத்தில் தனியாக வசிக்கிறார். சகோதரி மகனான அருண், 29, என்பவரை வளர்த்து வருகிறார். தரைத்தளத்தில், மகள் தீபா குடும்பத்துடன் வசிக்கிறார். அஞ்சம்மாள், சொத்துக்களை அருணுக்கு எழுதி வைத்துவிடுவார் என்ற சந்தேகத்தில், வீடு, நகை, பணம் கேட்டு மிரட்டி கடத்த முயன்றுள்ளார். குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து தீபாவை, கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். நடைமேடையில் இறந்து கிடந்த வாலிபர் ஆவடி: ஆவடி ரயில் நிலைய இரண்டாவது நடைமேடையில் நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்த படி பேச்சு மூச்சின்றி இருந்தார். ஆம்புலன்சில் வந்த செவிலியர் அவரை பரிசோதித்த போது, அவர் இறந்தது தெரிந்தது. ஆவடி ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இறந்தவர் நீல நிறத்தில் சட்டை மற்றும் பச்சை நிறத்தில் வேஷ்டி அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊர் போன்ற விபரங்கள் தெரியவில்லை. மனைவி பிரிவு: புதுமாப்பிள்ளை தற்கொலை மதுரவாயல்: மதுரவாயலைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24; ஆட்டோ ஓட்டுநர். ஐந்து மாதங்களுக்கு முன், ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். குடும்ப தகராறில், மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்ற விரக்தியில், நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். வீடு புகுந்து நகை திருடியவர் கைது மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது சகோதரர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 20ம் தேதி, மடிப்பாக்கம் பெரியார் நகரில் உள்ள சகோதரரின் வீட்டிற்கு சீனிவாசன் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. விசாரித்த மடிப்பாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 25, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்; இருவரை தேடி வருகின்றனர். ஜி.ஹெச்.,சில் போன் திருடியவர் கைது பூக்கடை: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 27; கொத்தனார். இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த 28ல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவருக்கு பேருந்து கிடைக்காததால், இரவு மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் துாங்கியுள்ளார். மறுநாள் எழுந்து பார்த்தபோது, அவரது மொபைல்போன் திருடு போனது தெரிந்தது. விசாரித்த பூக்கடை போலீசார், திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வேல்முருகன், 29, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கல்லுாரி மாணவி தற்கொலை பல்லாவரம்: திரிசூலத்தைச் சேர்ந்தவர் மித்ரா, 19; தனியார் கல்லுாரி மாணவி. சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மித்ரா, நேற்று முன்தினம் பெற்றோர் கட்டட வேலைக்கு சென்ற பின், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற 6 பேர் பிடிபட்டனர் புளியந்தோப்பு: புளியந்தோப்பு வ.உ.சி., நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திலீப், 23, சாமுவேல், 21, கார்த்திக், 25, மணி, 21, ஆகியோரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல, ஒடிஷாவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவான கன்னிகாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26, மற்றும் முகேஷ், 19, ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே தேவராஜ், 38, கைது செய்யப்பட்டு, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை