ஜாம்பஜார்: ராயப்பேட்டை, நாயர் வரதப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாலினி, 30; பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 30-ம் தேதி கடையை மூடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது, தன் இரண்டரை வயது ஆண் குழந்தையிடம் மொபைல்போனை கொடுத்திருந்தார். பின், குழந்தையின் கையில் பார்த்தபோது, போன் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த ஜாம்பஜார் போலீசார், திருட்டில் ஈடுபட்ட மொபைல் போன் திருடிய பீஹாரைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சம்சுல் ஹக், 20, என்பவரை கைது செய்தனர்.தொழிலாளியிடம் பணம், போன் பறித்தவர் கைது வண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன், 25, என்பவரை, பார்த்தசாரதி மேம்பாலம் அருகே மூவர் கத்தியால் வெட்டி, 4,200 ரூபாய், மொபைல் போன் பறித்துச் சென்றனர். விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், பழைய வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரியைச் சேர்ந்த நாகராஜ், 20, என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான இருவரை போலீசார் தேடுகின்றனர். மது போதையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 31. இவரது கணவர் அருண்குமார், 36; ஆட்டோ டிரைவர். திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையான அருண்குமார், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது அருந்தி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதால், ஜெயலட்சுமி தந்தை வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வெளியேறினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அருண்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. கொடுங்கையூர் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். பைக் திருடர்கள் பிடிபட்டனர் செங்குன்றம்: செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. செங்குன்றம் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், பைக் திருட்டில் ஈடுபட்டு புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் நேற்று செங்குன்றத்தைச் சேர்ந்த சஞ்சய், 20, போரூரைச் சேர்ந்த விக்னேஷ், 25, ஆகியோரை கைது செய்து, மூன்று இருசக்கர வாகனங்களை மீட்டனர். மாணவியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி பல்லாவரம்: பல்லாவரத்தில், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற பிளஸ் 1 மாணவியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முகவரி கேட்பதுபோல் நடித்து, பாலியல் ரீதியாக தகாத முறையில் பேசியுள்ளார். மாணவி அளித்த தகவலின்படி, குன்றத்துாரைச் சேர்ந்த நடனசபாபதி, 25, என்பவரை அப்பகுதியினர் பிடித்து 'நையபுடைத்து' பல்லாவரம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 30 சவரன் நகை திருடியவர் சிக்கினார் கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், சுப்ரமணிய நகரில் பாஸ்கர், 53, என்பவரது வீட்டில், 1.80 லட்சம் ரூபாய், 30 சவரன் நகைகள் கடந்த 29ம் தேதி திருட்டு போயின. போலீசாரின் விசாரணையில், 'மார்க்கெட்' சுரேஷ், 49, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலுார் மாவட்டம் சோளிங்கரில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெண்ணை தாக்கிய இருவருக்கு 'காப்பு' சாஸ்திரி நகர்: பெருங்குடியைச் சேர்ந்தவர் பூஜா, 28. இவர், தன் சகோதரருடன் பெசன்ட் நகர் கடற்கரையில் மீன் வறுவல், பலுான் கடை நடத்தி வருகிறார். பெசன்ட் நகர் மாதா சர்ச் திருவிழாவுக்கு வந்த இருவர், பலுானை திருடிச் சென்றனர். அதை தடுக்க முயன்ற பூஜாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சிவகாசி, 20, மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.