உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

போலி சித்த மருத்துவர் கைது திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சேஷால கிராமணி தெருவில் சஜிகுமார், 58, என்பவர், ‘அகத்தீஸ்வரர் பஞ்சகர்மா’ என்ற பெயரில் சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த அவர், சித்த மருத்துவம் படிக்காமல், மூலிகை மாத்திரைகளை வழங்கி, போலியாக சித்த மருத்துவம் பார்த்து வந்தது, மருத்துவம் மற்று்ம ஊரக நலப்பணி துறை வாயிலாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கொலை முயற்சி: இருவர் கைது ராஜமங்கலத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 39. இவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஜாமினில் வெளியே வந்தார். நண்பர்களுடன் காரில் சென்ற மாசிலாமணியை, புழல் காவல் நிலையம் எதிரே, மர்ம கும்பல் கத்தியை காட்டி காரை வழிமறித்து, கொலை செய்ய முயன்றனர். மாசிலாமணி தப்பிய நிலையில், மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து தப்பினர். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், ராஜமங்கலத்தைச் சேர்ந்த வாழ்வேந்திரன், 19, நரேஷ், 24, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர். லாட்டரி விற்றவர் கைது கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கொடுங்கையூரைச் சேர்ந்த ஆனந்தா, 55, என்பதும், சந்தையில் கூலி வேலை செய்து வரும் நபர்களிடம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி எண்களை துண்டு காகிதங்களில் எழுதி கொடுத்து, சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து ஆனந்தாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 850 ரூபாய், ஒரு மொபைல் போன் மற்றும் லாட்டரி எண்கள் எழுதப்பட்ட துண்டு காகிதங்களை பறிமுதல் செய்தனர். ‘ஏசி’ உபகரணம் திருடிய 2 பேர் கைது மதுரவாயல்: மதுரவாயல், முதலாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கோயில்ராஜ் ஜெயசிங், 62. இவரது வீட்டு ‘ஏசி’யின் வெளிப்புற உபகரணங்கள் திருடுபோகின. மதுரவாயல் போலீசார் விசாரித்து, டி.பி.சத்திரம், ஷெனாய் நகரைச் சேர்ந்த முகேஷ், 28, புதுப்பேட்டை வெங்கடேஷ், 28, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இதேபோல், மற்றொரு வீட்டிலும் ‘ஏசி’ உபகரணத்தை திருடியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்