கிரைம் காரனர்
போதை பொருள் பறிமுதல்: 5 பேர் கைது மதுரவாயல்: மதுரவாயல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அதே பகுதி இமானுவேல், 32, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மெத்ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். அவரது தகவலையடுத்து, வடபழனி சஞ்சய், 26, அசோக் நகர் தனுஷ், 26, பர்வேஷ், 19, பிரவீன்குமார், 25, ஆகிய நால்வரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஒரு லேப்டாப் ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். ஆட்டோ திருடிய சிறுவன் கைது சென்னை: பெரம்பூர், அகரம் சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 63; இவருக்கு சொந்தமான ஆட்டோவை, சதீஷ் என்பவர் வாடகைக்கு எடுத்து சவாரி ஓட்டி வந்தார். மெரினா காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லுாரி அருகே ஆட்டோவை நிறுத்தி, சதீஷ், இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, ஆட்டோ திருடுபோனது. விசாரித்த மெரினா போலீசார், ஆட்டோ திருடிய மெரினா பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை நேற்று பிடித்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். ஓட்டுநரிடம் வழிப்பறி இருவர் கைது கே.கே.நகர்: கே.கே.நகர், அண்ணா சாலையைச் சேர்ந்தவர் தீபக், 24; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் அதிகாலை, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்ற இவரை வழிமறித்து தாக்கி 650 ரூபாயை இருவர் பறித்து சென்றனர். எழும்பூர் போலீசார் விசாரித்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட புதுப்பேட்டையைச் சேர்ந்த சாரதிகண்ணன், 22, தியாகராஜன், 28 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கடன் தொல்லை தொழிலாளி தற்கொலை வேப்பேரி: வேப்பேரி, ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, 37; கூலித்தொழிலாளி. சில மாதங்களாகவே, இளையராஜா கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.