உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  40 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கிய 3 ரேஷன் கடைக்கு நெருக்கடி

 40 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கிய 3 ரேஷன் கடைக்கு நெருக்கடி

அரும்பாக்கம்: அரும்பாக்கம் பகுதியில், ஒரே கட்டடத்தில், 40 ஆண்டுகளாக இயங்கிய மூன்று ரேஷன் கடைகளை உரிமையாளர்கள் காலி செய்ய கூறியதால், மாற்று இடம் கிடைக்காமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரும்பாக்கம் வள்ளுவர் தெரு மற்றும் ஜவகர் தெரு இணைப்பு பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில், மூன்று ரேஷன் கடைகள், 40 ஆண்டுகளாக வாடகையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கட்டடத்தின் உரிமையாளர்கள், கடையை காலி செய்ய அறிவுறுத்தியதால், மாற்று இடம் கிடைக்காமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, நுகர்வோரும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நுகர்வோர் கூறியதாவது: அரும்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 4,013 குடும்ப அட்டைதாரர்கள், இந்த மூன்று ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். கட்டடத்தின் உரிமையாளர் இடத்தை விற்றதால், கடையை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாற்று வாடகைக்கு கட்டடம் கிடைக்காமல், ரேஷன் கடை ஊழியர்கள் திணறி வருகின்றனர். பொங்கல் பண்டிகை வர உள்ளதால், ஊழியர்கள் மட்டுமின்றி, குடும்ப அட்டைதாரர்களும் சிரமப்படுவர். எனவே, மக்கள் நலன் கருதி, மூன்று ரேஷன் கடைகளுக்கு சொந்தமாக கட்டடத்தை கட்டி கொடுக்க அரசு முன்வரவேண்டும். இதே பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக காலி இடங்களும் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ