ராயபுரம் மேம்பாலத்தில் திடீர் பள்ளத்தால் ஆபத்து
ராயபுரம்: போக்குவரத்து நெரிசல் மிகுந்த ராயபுரம் மேம்பாலத்தில், திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் தடுமாறினர். எண்ணுார், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் மேம்பாலம் வழியாக பாரிமுனை, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த மேம்பாலத்தின் நடுவே, நேற்று மதியம் 12:00 மணிக்கு, திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்திலிருந்து, 10 மீட்டர் துாரம் விரிசலும் ஏற்பட்டதால், சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தடுமாறினர். இதைப் பார்த்த பொது மக்களில் ஒருவர், பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைத்து, அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடுத்தார். எதனால் திடீர் பள்ளம் ஏற்பட்டது என, தெரியவில்லை. போக்குவரத்து அதிகமுள்ள சாலை என்பதால், மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை, உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.