சிமென்ட் கலவை லாரிகளில் இருந்து கொட்டும் ஜல்லிக்கற்களால் ஆபத்து
சேலையூர், சேலையூரை அடுத்த வேங்கைவாசல் பிரதான சாலையில், தனியாருக்கு சொந்தமான சிமென்ட் கலவை தயார் செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது.இங்கிருந்து, நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட லாரிகள், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சிமென்ட் கலவையை எடுத்து செல்கின்றன.அப்படி செல்லும் போது, அந்த லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறுகின்றன. குறிப்பாக, வேங்கைவாசல் பிரதான சாலை வழியாக வரும் லாரிகள், வேளச்சேரி சாலையில் திரும்பும் சந்தோஷபுரம் சிக்னலில், அதிகமான அளவில் ஜல்லிக்கற்கள் சிதறியுள்ளன.இதனால், அதிக போக்குவரத்து கொண்ட அந்த சந்திப்பில், நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்களில் சிக்கி வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.எனவே, போக்குவரத்து போலீசார் - நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, சிமென்ட் கலவை லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் கொட்டுவதையும், அதனால் விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.