உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணிகளால் சேதமான சாலைகளை சீரமைப்பதில் தாமதம்

மெட்ரோ பணிகளால் சேதமான சாலைகளை சீரமைப்பதில் தாமதம்

சென்னை, சேதமடைந்துள்ள சாலைகளை, மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளதாதால், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்வே கட்டுமான பணிகள் நடக்கின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுன்ட் பூந்தமல்லி சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலையில் இப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதே போல, பழைய மாமல்லபுரம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, வெங்கட் நாராயணா சாலை, ஆழ்வார்பேட்டை நெடுஞ்சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலையிலும் பணிகள் நடக்கின்றன. இதனால், 2028ம் ஆண்டு வரை, இச்சாலைகளின் பராமரிப்பு பணிகள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலை பராமரிப்பில் மெட்ரோ ரயில் நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால், பல சாலைகள், குண்டும், குழியுமாக மாறியுள்ளன.குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் மாதவரம் 100 அடி சாலையின் நிலைமை, கவலைக்கிடமாக உள்ளது. இதில், தற்காலிக சீரமைப்பு பணிகளைக்கூட மெட்ரோ ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.இதனால், 100 மீட்டர் சாலையை கடந்து செல்ல, சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்குமேல் காத்திருக்க வேண்டியுள்ளது.இதேபோல, மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போரூர் முதல் பூந்தமல்லி வரை, சாலையில் அபாய பள்ளங்கள் அதிகரித்துள்ளன. மழை நேரத்தில், காட்டுப்பாக்கத்தில் சாலையை மூட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. சாலையை முறையாக பராமரிக்குமாறு, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, பலமுறை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டங்களிலும் நேரில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி, மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சாக்கு கூறிவந்தது. மழையால் சாலைகள் படுமோசம் அடைந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்டுமான பணிகளுடன், சாலை பராமரிப்பு பணிகளிலும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

350 இடங்களில் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லுார், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் ஆகிய மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.பணிகள் முடிந்துள்ள பகுதிகளில், உடனுக்குடன் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம்.சமீபத்தில் பெய்த மழைக்குப்பின், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள சாலைகளில், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 515 இடங்களில் சாலைகளில் சேதமடைந்தது இருப்பது கண்டறியப்பட்டது.மழை முடிந்த உடனே, சீரமைப்பு துவங்கப்பட்டு, 350க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை ஓரிரு நாளில் முடிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ