வடசென்னையின் அடையாளமான எம்.எம்.தியேட்டர் இடிப்பு
தண்டையார்பேட்டை:வடசென்னையின் அடையாளமாக விளங்கிய, எம்.எம்.திரையரங்க வளாகம், அடுக்குமாடி குடியிருப்பாக மாறுகிறது. இதையொட்டி, தியேட்டரை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், எம்.எம்.திரையரங்கம் பிரபலமானது. மொத்தம், 772 பேர் அமரும் வகையிலான இந்த தியேட்டர், 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது. மெட்ரோ ரயில் பணிகளின்போது கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகன நிறுத்த தேவையான வசதி இல்லாததால், ரசிகர்கள் வருகை குறைந்தது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து மீண்டும் திரையரங்கம் திறக்கப்பட்டாலும், வாகன நிறுத்த வசதியின்மை, புதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தற்போது , இந்த வளாகம் அடுக்குமாடி குடியிருப்பாக மாறுகிறது. இதையொட்டி, திரையரங்கம் இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இது, ரசிகர்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. பி.பி.சி.எல்., உம்மிடி எண்டர்பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனம், ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட உள்ளதாகவும், அதனால் திரையங்கம் இடிக்கும் பணி துவங்கியுள்ளதாகவும், நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.