திருத்தணி கோவிலில் வளர்ச்சி பணி ஓராண்டிற்கு திருமண பதிவு நிறுத்தம்
திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவில், ஆர்.சி.சி., மண்டபத்தில், வரும் ஏப்ரல் முதல், ஓராண்டிற்கு திருமண முன்பதிவு இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, திருத்தணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது:முருகன் கோலிலுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டம், 106 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள் அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அடுத்த மாதம் முதல் வளர்ச்சி பணிகள் துவக்கப்படும்.குறிப்பாக, மலைக்கோவிலில், 25 கோடி ரூபாயில், மூன்று அடுக்கு கொண்ட அன்னதான கூடம் அமைத்து, ஒரே நேரத்தில், 500 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும், 500 பக்தர்களுக்கு காத்திருக்கும் அறை, 30 கழிப்பறையும் அமைய உள்ளன.இதனால், தற்போதுள்ள அன்னதான கூடம் இடிக்கப்பட உள்ளதால், அடுத்த மாதம் முதல் அன்னதான கூடம், ஆர்.சி.சி., மண்டபத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்.இதனால், ஓராண்டிற்கு ஆர்.சி.சி., மண்டபத்தில் திருமண பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. புதிய அன்னதான கூடம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு விடப்பட்டதும், மீண்டும் ஆர்.சி.சி., மண்டபத்தில் திருமணத்திற்கான முன்பதிவு துவங்கும்.அதேநேரம், பக்தர்கள் நலன் கருதி மயில் மண்டபம், காவடி மண்டபம், உச்சி பிள்ளையார் ஆகிய பகுதிகளில், முக்கிய விசேஷ நாட்கள், அதிகளவில் பக்தர்கள் கூடும் நேரத்தில் மட்டும், திருமண பதிவு நிறுத்தப்படும்; மற்ற நாட்களில் திருமணம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.