உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயணியர் பொருட்களை பாதுகாக்க சென்ட்ரலில் டிஜிட்டல் லாக்கர் அறை

பயணியர் பொருட்களை பாதுகாக்க சென்ட்ரலில் டிஜிட்டல் லாக்கர் அறை

சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியர் பொருட்களை பாதுகாக்கும் வகையில், டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் முக்கிய ரயில் நிலையமாக இருக்கிறது. தினமும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். வழக்கமான பயணியரை தவிர, சுற்றுலா பயணியரும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களின் உடைமைகளை, போகும் இடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்லும் நிலை உள்ளது. இதை தவிர்க்கவும், ஒரு ரயிலில் இறங்கி மற்றொரு ரயிலில் செல்லும் இடைப்பட்ட நேரத்தில், உடைமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, வெளியே சென்று வர வசதியாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது.இது, ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. இங்கு நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என மூன்று வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளன. மொத்தம் 84 லாக்கர்கள் உள்ளன.

கட்டணம்

நடுத்தர வகை லாக்கர் பெட்டிகளுக்கு முதல் மூன்று மணி நேரத்துக்கு 40 ரூபாய், ஆறு மணி நேரத்துக்கு 60 ரூபாய், ஒன்பது மணி நேரத்துக்கு 90 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 ரூபாய் கட்டணம். பெரிய வகை லாக்கர் பொருத்தரை, முதல் மூன்று மணி நேரத்துக்கு 50 ரூபாய், ஆறு மணி நேரத்துக்கு 80 ரூபாய், ஒன்பது மணி நேரத்துக்கு 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் கட்டணம் 160 ரூபாய். மிகப்பெரிய வகை லாக்கர் பெட்டிகளுக்கு முதல் மூன்று மணி நேரத்துக்கு 60 ரூபாய், ஆறு மணி நேரத்துக்கு 100 ரூபாய், ஒன்பது மணி நேரத்துக்கு 150 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்க, போன்சல் என்ற தனியார் நிறுவனம், ரயில்வேயுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: டிஜிட்டல் லாக்கர் பெட்டிகள் முழுதும் ஸ்மார்ட் போன் வாயிலாக இயங்கக்கூடியது. பயணி ஒருவர் தனது உடைமைகளை லாக்கரில் வைக்க வேண்டும் எனில், தனது மொபைல்போனில், டிஜிட்டல் லாக்கரில் உள்ள க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இதன்பிறகு, அதில் லாக்கரை தேர்வு செய்து, ஜி-பே வாயிலாக கட்டணத்தை செலுத்த வேண்டும். உடனே, லாக்கர் எண்ணுடன் ரகசிய எண் கிடைக்கும். இதை பயன்படுத்தி, லாக்கர் அறையில் உடைமைகளை வைத்து, எடுத்துக் கொள்ள முடியும். எவ்வளவு நேரம் லாக்கரை பயன்படுத்துகிறோம் என்பது குறித்து பயனாளர்களுக்கு உடனடி தகவல் சென்றுவிடும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைக்க அனுமதி கிடையாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !