தினமலர் கார்ப்பரேட் லீக் கிரிக்கெட் காலிறுதி சுற்று போட்டி விறுவிறுப்பு
சென்னை:'தினமலர்' நாளிதழ் மற்றும் 'நம்ம பேமிலி குரூப்' இணைந்து, டி.சி.எல்., என்ற பெயரில், 'தினமலர் கார்ப்பரேட் லீக்' சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றன. உடன், பார்வதி ஹாஸ்பிட்டல் கார்ப், ஸ்போர்டஸ், கிட்டே புட்டே, எச்.டி.எப்.சி., வங்கி, அக் ஷய கல்பா, ட்ராப்டேக்ஸி, ஜி.ஓ.சி., ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.வேளச்சேரி அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம், சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில், 'சூப்பர் நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டிகள், கடந்த 24ல் துவங்கி, ஜூன் 8ல் நிறைவடைகின்றன.மொத்தம் 32 அணிகளில் 24 அணிகள் வெளியேறிய நிலையில், நேற்று காலை நடந்த காலிறுதி சுற்றில் இன்டெலக்ட் சி.சி., அணியுடன், எச்.சி.எல்.டெக்., சூப்பர்நோவாஸ் அணி மோதியது.முதலில் களமிறங்கிய இன்டெலக்ட் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரிகிருஷ்ணன், 26 பந்துகளை எதிர்கொண்டு, இரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 35 ரன்களும், முகிலன் ஆறுமுகம் 33 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களும் எடுத்தனர்.எட்டிவிடும் இலக்குடன் அடுத்து களமிறங்கியஎச்.சி.எல்.டெக்., சூப்பர்நோவாஸ் அணியின் துவக்க வீரர் விக்னேஷ், ஆட்டமிழக்காமல் 47 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரி, இரு சிக்ஸ் உட்பட 45 ரன்கள் எடுத்தார்.இவருடன் நான்காவது விக்கெட்டுக்கு கைகோர்த்த முத்துப்பாண்டி 31 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார்.இதனால், 16.2 ஓவர் முடிவில் எச்.சி.எல்.டெக்., சூப்பர்நோவாஸ் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 118 எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.நேற்று காலை நடந்த மற்றொரு போட்டியில் சால்காம்ப் அணியுடன், டி.சி.எஸ்., அணி மோதியது. முதலில் களமிறங்கிய சால்காம்ப் அணி, துவக்கம் முதலே அடித்து ஆடி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நந்தா, 27 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரு சிக்ஸ் உட்பட 45 ரன்கள்; ராம் செய்யார் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸ் உட்பட 36 ரன்கள் எடுத்தனர்.இதை எதிர்கொண்டு களமிறங்கிய டி.சி.எஸ்., அணி, கடுமையாக போராடி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில்., சால்காம்ப் அணி வெற்றி பெற்றது.டி.சி.எஸ்., அணி சார்பில், அதிகபட்சமாக மிர்சா முகமத், சாகர் மணி ஆகிய இருவரும் தலா 27 பந்துகளை எதிர்கொண்டு, தலா 25 ரன்கள் எடுத்தனர்.தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், ஐ.என்.எப்.ஒய்., சி.டி.சி.சி., அணி, எதிர்த்து ஆடிய, பென்டாஸ்டிக் மைட்டி ரேப்டர்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.