அண்ணா நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அதிருப்தி
அண்ணா நகர், போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தால், அண்ணா நகரில் நடைபாதையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன.அண்ணா நகர் மண்டலத்தில், கிழக்கு அண்ணா நகர் ஆறாவது அவென்யூவில், குடியிருப்புகள் மத்தியில், பல ஏக்கர் பரப்பில் போகன்வில்லா எனும் பெயர் கொண்ட பழமையான பூங்கா உள்ளது.பூங்காவை சுற்றியுள்ள, நான்கு முதல் 25வது தெருக்கள் வரை மற்றும் 2வது பிரதான சாலை, ஆறாவது அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இங்கு தினமும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து செல்கின்னர். ஸ்கேட்டிங், நடைபயிற்சி, சிறுவர்கள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூங்காவை சுற்றிய நடைபாதையில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன.இதனால், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர்.நடைபாதை முழுதும் காலை முதல் இரவு வரை கடைகள் போடப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. அதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்பு கடைகள் நள்ளிரவு வரை விதிமீறி இயங்கி வருகின்றன. இதேபோல், அண்ணா நகரை சுற்றி அனைத்து பகுதிகளிலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன.இந்த கடைகளை அகற்ற வேண்டிய, அண்ணா நகர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசாரும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.