மாவட்ட டிவிஷன் கிரிக்கெட் லீக் அம்பத்துார் அணி அபார வெற்றி
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான டிவிஷன் லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு கிரிக்கெட் குழுவின் அணிகள் பங்கேற்றுள்ளன. மண்டலம் மற்றும் பகுதி வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன.இதில், ஆவடி ஹிந்து கல்லுாரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஸ்டாண்டர்ட் அம்பத்துார் அணியை எதிர்த்து, பைன் ஆர்ட்ஸ் கிளப் அணி மோதியது.இதில் முதலில் பேட் செய்த அம்பத்துார் அணி, நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.அந்த அணியின் வீரர் நயாப் அக்மத், பந்துகளை பாரபட்சமின்றி வெளுத்து வாங்கி, 84 பந்துகளில் 8 பவுண்டரி, 9 சிக்சர்கள் உட்பட 130 ரன்கள் குவித்தார்.சவாலான இலக்குடன் அடுத்து களமிறங்கிய பைன் ஆர்ட்ஸ் அணிக்கு, அம்பத்துார் அணி பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி தந்தனர்.இதனால் அந்த அணியால் 45 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 108 ரன்கள் வித்தியாசத்தில், அம்பத்துார் அணி அபார வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.