உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் வீடு தேடி போகணுமா? 10 சதவீத படிவங்கள் கூட திரும்பாததால் அதிர்ச்சி

 உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் வீடு தேடி போகணுமா? 10 சதவீத படிவங்கள் கூட திரும்பாததால் அதிர்ச்சி

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியையொட்டி, சென்னையில் 90 சதவீத படிவங்கள் வழங்கப்பட்டாலும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதால், பூர்த்தி செய்யப்பட்ட, 10 சதவீத படிவங்கள்கூட திரும்ப வரவில்லை. இதனால், திருத்தப்பணி எந்த அளவு சரியாக முடியுமோ என்ற குழப்பம் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற வேண்டும் என, தேர்தர் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளில், 3,718 ஓட்டுச்சாவடி அலுவலர்களால், 40.04 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை, 38 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், படிவங்கள் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், படிவங்களில் அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலரின் பெயர் மற்றும் மொபைல் போன் எண் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணில் அழைத்தால், அலுவலர்கள் அழைப்பை ஏற்று வாக்காளர்களுக்கு பதில் அளிப்பதில்லை. மேலும், படிவங்களை மலேரியா மற்றும் துாய்மை பணியாளர்கள் நிலை பணியாளர்களே வழங்கியதால், அவர்களுக்கும் படிவம் பூர்த்தி செய்வது எப்படி என்று தெரியவில்லை. இதுவரை, 10 சதவீத மனுக்கள் கூட, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறவில்லை. சாதாரண வாக்காளர்கள் பல்வேறு சந்தேகங்களால் சரியாக பூர்த்தி செய்து தரவில்லை என்றாலும், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு படிவங்கள் வழங்கி இரண்டு வாரங்கள் ஆகியும், இன்னும் பூர்த்தி செய்த படிவங்கள் வந்தடையவில்லை. இந்த சூழலில், திருத்த பணியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா என்ற குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆலோசனை இதற்கு தீர்வு காணும் வகையில், 947 ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்பணி, வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் தலைமையில், வாக்காளர் திருத்தப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், படிவம் வினியோகம் மற்றும் பூர்த்தி செய்து பெற்ற படிவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், 38 லட்சம் படிவங்கள் இதுவரை வீடு வீடாக வினியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில், எட்டு லட்சம் படிவங்கள் தான் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. அவை சரிபார்த்து வெறும், 3 லட்சம் படிவங்கள் மட்டுமே, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. அதன்படி, 10 சதவீத படிவங்கள்கூட பதிவேற்றப்படவில்லை; இதுவரை, 20 சதவீதத்துக்கு குறைவான படிவங்கள் கூட பூர்த்தி செய்து பெறப்படவில்லை என்ற விபரம் தெரிய வந்தது. இதனால், இனி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணியாற்றாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து வாங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகம், பிழை இருப்பின், வாக்காளரிடம் கேட்டு பெற்று திருத்தம் செய்வதுடன், அவற்றை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றவும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, டிச., 4க்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் கெடு விதித்துள்ளது. இதுவரை, உட்கார்ந்த இடத்தில், 'பெஞ்ச்' தேய்த்த அலுவலர்கள், வீடு தேடி செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். குழப்பத்திற்கு அதிகாரிகளே காரணம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறியதாவது: ஓட்டுச்சாவடிகளில் காலை முதல் மாலை வரை அமர்ந்து, வாக்காளர்களுக்கு படிவம் வழங்கி, பூர்த்தி செய்ய உதவி புரிய வேண்டும். பூர்த்தி செய்தப்பின் அப்படிவங்களை பெற்று கொள்ள வேண்டும். இப்பணிகளை வரும் 25ம் தேதி வரை செய்ய வேண்டும். வெளியே சென்று படிவங்களை கொடுப்பதோ, வாங்குவதோ கூடாது என்று அதிகாரிகள் கூறினர். தற்போது, ஓட்டுச்சாவடிகளில் ஓரிருவர் இருந்தால் போதும், மற்றவர்கள் வீடு, வீடாக செல்லுங்கள் என்கின்றனர். அதிகாரிகள் மாற்றி, மாற்றி கூறுவதே குழப்பத்திற்கு காரணம். என்ன செய்வது என்றே தெரியாமல் பலர் வேலை பார்க்கிறோம்; கண்காணிப்பும் கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ