உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்கு வரும் வீராணம் ஏரி நீர் பாதுகாப்பானது தீர்ப்பாயத்தில் குடிநீர் வாரியம் அறிக்கை

சென்னைக்கு வரும் வீராணம் ஏரி நீர் பாதுகாப்பானது தீர்ப்பாயத்தில் குடிநீர் வாரியம் அறிக்கை

சென்னை, வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வரும் குடிநீர் பாதுகாப்பானதுதான் என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், சென்னை குடிநீர் வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து, சென்னைக்கு குடிநீர் வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து கல்லணை, கீழணை, வடவாறு வழியாக காவிரி நீர், வீராணம் ஏரிக்கு வருகிறது. கடந்த 2024 மே 25ல், மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வந்த நீர் பச்சை நிறமாக இருந்தது. கரூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்து சாயக்கழிவு கள் கலந்திருக்கலாமோ என்ற அச்சம் விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக, 2024 மே 31ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், 'வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வரும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. அதன்படி, தீர்ப்பாயத்தில், சென்னை குடிநீர் வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் தாக்கல் செய்த அறிக்கை: வீராணம் ஏரியிலிருந்து வரும் நீர், வடக்குத்து கிராமத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அப்படி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்தான் சென்னைக்கு வருகிறது. இந்தப் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்கிறது. வடக்குத்து நீர் சுத்தி கரிப்பு நிலையத்திலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் அவ்வப்போது எடுக்கப்படுகிறது. நீர் மாதிரிகள், ஆய்வ கங்களின் சோதனைகள் மற்றும் அளவீடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் தேசிய அமைப்பான என்.ஏ.பி.எல்., அங்கீகாரம் பெற்ற, சி.பி.சி.எல்., ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. சென்னை கிண்டியில் உள்ள, மெட்டக்ஸ் லேப் பி.லிட்., ஆய்வகத்திலும் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், வடக்குத்து நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் குடிநீரில், மிக குறைவான அளவே பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சென்னைக்கு வரும் குடிநீர் பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை