சென்னையில் குடிநீர் லாரிகள் மோதி, 20 நாட்களில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்கால தண்ணீர் தேவையை பயன்படுத்தி, தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் வேக கட்டுப்பாட்டு கருவியின்றி, தறிகெட்டு ஓட்டுவது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கிண்டியில், 2016ல் தறிகெட்டு ஓடிய குடிநீர் ஒப்பந்த லாரி மோதி, மூன்று கல்லுாரி மாணவியர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், குடிநீர் கொண்டு வர பயன்படுத்தப்படும் தண்ணீர் லாரிகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் குடிநீர் லாரிகளில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டது.மேலும், கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீர், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு வரும்பட்சத்தில், குறிப்பிட்ட வழித்தடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கொண்டு வர வேண்டும்.சென்னை குடிநீர் வழங்கல் வாரிய ஒப்பந்த லாரிகளுக்கும், இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டதுடன், ஜி.பி.எஸ்., வாயிலாக, இடையில் குடிநீர் லாரிகள் நிற்கின்றனவா அல்லது வேறு பாதையில் செல்கின்றனவா போன்றவை ஆராயப்பட்டன.அதன்படி, சென்னை மாநகருக்குள், காலை 7:00 முதல் முற்பகல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும், தண்ணீர் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டன.நாளடைவில், இந்த விதிமுறைகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். புள்ளி விபரம்
இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மீண்டும், நேர மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் இல்லாமல், நெறிமுறை மீறி தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் தங்கள் விருப்பம்போல, தாறுமாறாக ஓட்டி வருகின்றனர்.*இதனால், கடந்த ஏப்., 26ல், நன்மங்கலம், கோவளம் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன், 36, என்பவர் வேலை முடித்து, இரவு 8:00 மணிக்கு துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, பைக்கில் வரும்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பலியானார். ஏப்., 30ல், பல்லாவரம் அடுத்த அனகாபுத்துார், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராம்பாபு, 32, என்பவர், கோவிலம்பாக்கம் பெட்ரோல் 'பங்க்' அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். மே, 9ல், நன்மங்கலம், அம்பேத்கர் சாலை, முத்தையா நகரைச் சேர்ந்த ஆனந்தன், 22, என்பவர், தன் அண்ணனுடன் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதி, உடல் நசுங்கி உயிரிழந்தார். அந்த வகையில், கடந்த 20 நாட்களில் தண்ணீர் லாரி மோதி, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.ஆண்டுதோறும், தறிகெட்டு ஓடும் தண்ணீர் லாரிகளால், விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஆண்டிற்கு குறைந்தது 10 பேர் உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, மெட்ரோ ரயில் பணி, இதர சேவை துறை பணிகள் மற்றும் தரமற்ற சாலை சீரமைப்பு உள்ளிட்டவற்றால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சாலை பல்லாங்குழியாக மாறி உள்ளது.இச்சாலைகளில், தண்ணீர் லாரிகளும் தறிகெட்டு ஓடுவது, விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தண்ணீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விடுவதால், தண்ணீர் லாரிகளை கண்டாலே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கண்காணிப்பு அவசியம்
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.இவற்றிற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், ஏரிகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 15,000த்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. நகர மயமாக்கல் காரணமாக, புறநகர் பகுதிகளில் நிலத்தடிநீர் நன்றாக இருந்தாலும், கேன் குடிநீர் பருகுவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.இவற்றை பயன்படுத்தி, தண்ணீர் லாரிகள் ஒரு நாளைக்கு, 50க்கும் அதிகமான 'ட்ரிப்' அடித்து வருகின்றனர். பல நேரங்களில் ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டும் அவர்களில் சிலர், மது அருந்தி விட்டும் ஓட்டி செல்கின்றனர்.இதனால், தண்ணீர் லாரிகளை கண்டாலே பொதுமக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இயக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சம் ஏற்படுத்தாமல் இயக்கப்படுகிறதா போன்றவற்றை, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தறிகெட்டு ஓடும் தனியார் தண்ணீர் லாரிகள் மற்றும் குடிநீர் லாரிகளின் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதோடு, முறைகேடாக இயங்கிவரும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின்சார இணைப்பை துண்டிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் அலட்சியம்
சென்னையில் 2016ல் மூன்று மாணவியர் குடிநீர் லாரியால் உயிரிழந்தபோது, கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டன. அதேபோல், கடந்த 2023, ஆக., 21ல், பள்ளி மாணவி லியோராஸ்ரீ, 10, தன் தாயுடன் பைக் பின்னால் அமர்ந்து பள்ளிக்கு சென்றபோது, தண்ணீர் லாரி மோதி பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, லாரி ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.தென் சென்னையின் பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன; அவற்றுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதேநேரம், இச்சம்பவம் மக்கள் மனதில் இருந்து மறைய துவங்கியதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், தண்ணீர் லாரிகள் மீதான கட்டுப்பாட்டை மறந்து, அலட்சியமாக இருந்து விடுகின்றனர். இதனால் தங்கள் விருப்பம்போல், குடிநீர் லாரி ஓட்டுனர்கள் இயக்கி, மக்கள் உயிருடன் விளையாடி வருகின்றனர்.
தென் சென்னையில் அட்டூழியம்
பல்லாவரம், திருநீர்மலை, கீழ்க்கட்டளை, நன்மங்கலம், மேடவாக்கம், நாராயணபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் ஏரிகள் உள்ளன. இங்கு நிலத்தடி நீர் தாராளமாக கிடைப்பதால், 100க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. வெயில் காலங்களில், குடிநீர் வியாபாரம் அதிகளவில் நடப்பதால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் மோட்டார் வைத்து, தண்ணீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி, லாரிகள் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.