உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொட்டு சொட்டாக வரும் மெட்ரோ குடிநீர் அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அவலம்

சொட்டு சொட்டாக வரும் மெட்ரோ குடிநீர் அமைச்சர் தொகுதியில் நீடிக்கும் அவலம்

பல்லாவரம்ஆலந்துார் தொகுதிக்கு உட்பட்ட கவுல்பஜார் ஊராட்சியில், மெட்ரோ வாட்டர் வரத்து குறைந்து விட்டதால், அவ்வூராட்சி மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆலந்துார் சட்டசபை தொகுதியில் அடங்கியது, கவுல்பஜார் ஊராட்சி. 6 வார்டுகளை கொண்ட இவ்வூராட்சியில், 1,200 குடியிருப்புகள் உள்ளன. 7,500 பேர் வசிக்கின்றனர். இவ்வூராட்சி மக்களுக்கு, மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்து தண்ணீரை வாங்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் செய்து வந்தனர்.பல்லாவரம் வெட்டர் லைன் வழியாக செல்லும் மெட்ரோ குழாயில் இருந்து, தனியாக குழாய் பதித்து, கவுல்பஜாருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில், நாள்தோறும், 1 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி வினியோகம் செய்கின்றனர்.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்து வரும் குடிநீரின் அளவு குறைந்து விட்டது. 5,000 முதல் 10,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே வருவதால், அதை வைத்து மக்களுக்கு வினியோகம் செய்ய முடியவில்லை.அதனால், கொஞ்சம் கொஞ்சமாக வரும் தண்ணீரை தொட்டிகளில் நிரப்பி, 5, 6 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வூராட்சி மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். வழியின்றி பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடிநீரின் அளவு குறைந்தது குறித்து, மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் கேட்டால், ஆங்காங்கே உள்ள பிரச்னைகளைக் கூறியே காலத்தை கடத்தி வருகின்றனர். அமைச்சர் தொகுதியிலேயே குடிநீர் பிரச்னை நீடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கவுல்பஜாரை ஒட்டி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் பகுதி உள்ளது. பம்மலில் இருந்து குழாய் அமைத்து, இவ்வூராட்சி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யலாம். இப்படி செய்தால், குடிநீர் பிரச்னை ஏற்படாது.அதேநேரத்தில், அடுத்த தேர்தலில், தாம்பரத்துடன் இவ்வூராட்சி இணைக்கப்பட உள்ளதால், இது பயனுள்ளதாகவும் இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவ்வூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை