மதுபோதையில் கல்லுாரி பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் கைது
வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்தில் இருந்து வில்லிவாக்கம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், தனியார் கல்லுாரி பேருந்து ஒன்று, வேகமாகவும், தாறுமாறாகவும் சென்றுள்ளது. மேம்பால இறக்கம் அருகில் பலத்த சத்தத்துடன் திடீரென 'பிரேக்' பிடித்து நின்றது. இதனால், பின்னால் அடுத்தடுத்து வந்த மற்ற வாகனங்கள் இடித்து நின்றன. அதேபகுதியில், தணிக்கையில் இருந்த வில்லிவாக்கம் போலீசார், ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனக் கருதி வேகமாக சென்று சோதித்தனர். அப்போது, ஓட்டுநர் இருக்கையில் இருந்த நபர், அதீத மது போதையில் 'ஸ்டேரிங்' மீது படுத்துள்ளார். அவரை கீழே இறக்கி போக்குவரத்தை சீரமைத்தனர். விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சரணவன், 34 என்பதும், பிரபல தனியார் கல்லுாரியின் பேருந்து ஓட்டுநர் என்பதும் தெரிந்தது. மாதவரத்தில் வாகனத்தை நிறுத்த சென்ற நபர், அதீத மது போதையில் திசை தெரியாமல் பாடி மேம்பாலம் வழியாக வந்து, போதையில் மயங்கியுள்ளார். இதேவேகத்தில் பேருந்து, மேம்பால இறக்கத்தில் இறங்கியிருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அசாதாரண சூழலை கருத்தில் வைத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதம் மட்டும் வசூலிக்காமல், அதீத போதையில் வாகனம் ஓட்டுதல், மக்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, ஓட்டுநர் சரவணனை நேற்று சிறையில் அடைத்தனர். பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.