மதனந்தபுரம் - முகலிவாக்கம் சாலை ஆக்கிரமிப்பு பயத்தால் பஸ்களை இயக்க மறுக்கும் ஓட்டுநர்கள்
மணப்பாக்கம் - -முகலிவாக்கம் பிரதான சாலையில், மதனந்தபுரம்- - முகலிவாக்கம் வரை உள்ள கடைகள் நடைபாதை, சாலையை ஆக்கிரமித்துக் கொள்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதோடு, விபத்து பயத்தால் மாநகர பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் மறுக்கின்றனர்.பரங்கிமலை- - பூந்தமல்லி சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மணப்பாக்கம் - -முகலிவாக்கம் பிரதான சாலை, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் வழியாக, போரூர்- - குன்றத்துார் சாலையை அடைகிறது.இச்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் பல தனியார், அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றின் மாணவ - மாணவியர், ஐ.டி., நிறுவன பணியாளர்கள் இச்சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில், பல மாநகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சாலையில், மதனந்தபுரம் - -முகலிவாக்கம் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து உள்ளன.அக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், 'பீக்- ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுகின்றன. இந்த அச்சத்தால், மாநகர பேருந்துகளின் ஓட்டுநர்கள், இச்சாலையில் பேருந்துகளை இயக்க மறுக்கின்றனர். மாநகராட்சியினர் ஆக்கிரமிப்பை அகற்றினால், அடுத்த சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.எனவே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து, சாலையோர ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.