லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. பதிவாகும் ஓட்டு இயந்திரங்களை, அண்ணா பல்கலை, ராணிமேரி மகளிர் கல்லுாரி, லயோலா கல்லுாரிகளில் பாதுகாப்பாக வைப்பதற்கு, அறைகள் தயார் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன.இதில், வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னை தொகுதிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சோழிங்கநல்லுார் தொகுதியும் கூடுதலாக வருகிறது.அதனால், 18 சட்டசபை தொகுதிகளில், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.அதன்படி, 4,680 ஓட்டுச்சாவடி மையங்களில், 14,891 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.அதேபோல், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுப்பதிவு வரும் 19ல் நடைபெற உள்ளது.பதிவாகும் ஓட்டு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் இடங்களை தயார் செய்யும் பணியில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதன்படி, தென்சென்னை லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலை வளாகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.அதற்காக, ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு, தலா 2 அறைகளும், அதிக ஓட்டுகள் உடைய சோழிங்கநல்லுார் தொகுதிக்கு, மூன்று அறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையும், 2,000 முதல் 3,000 சதுர அடி பரப்பு உடையவை.அங்கு, மூன்று அடுக்குகளில் ராக் அமைத்து, இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ண 2,500 முதல் 5,000 சதுர அடி பரப்பில், அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில், ஓட்டு எண்ணும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்படுகிறது.அதேபோல், மத்திய சென்னையில் பதிவாகும் ஓட்டுகள் லயோலா கல்லுாரி வளாகத்திலும், வடசென்னையில் பதிவாகும் ஓட்டுகள் ராணிமேரி மகளிர் கல்லுாரி வளாகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.ஓட்டுகள் இருக்கும் அறை பூட்டி 'சீல்' வைக்கப்படும். இதை, 24 மணி நேரம், சுழற்சி முறையில் கண்காணிக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்படுகிறது.இதோடு, ஓட்டு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் வளாகம் முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடங்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. அப்பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்படும். வாக்காளர்களுக்காக ஓட்டுச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.அதன்படி, ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்விசிறி, மின்விளக்குகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் எளிதில் வந்து செல்ல ஏதுவாக சாய்வு தளம், சக்கர நாற்காலி, பந்தல், கண்காணிப்பு கேமரா, வரிசையில் செல்ல ஏதுவாக மூங்கில் கட்டைகள் கட்டுதல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -