பெண் பொறியாளரிடம் சீண்டல் டிரவைிங் ஸ்கூல் உரிமையாளர் கைது
மடிப்பாக்கம், இருசக்கர வாகன பயிற்சி அளிப்பதாக, பெண் பொறியாளரிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரை, மகளிர் போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கம், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, 24 வயது பெண் பொறியாளர். இவர், தனியார் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இருசக்கர வாகனம் ஓட்டி பழகுவதற்காக, மடிப்பாக்கம், ராம் நகரில் செயல்பட்டு வரும் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்துள்ளார். நேற்று இரவு 8:00 பணி முடித்து, தனது தந்தையுடன், 'டிரைவிங் ஸ்கூல்' சென்றுள்ளார். அவருக்கு, இருசக்கர வாகனம் பயிற்சி அளிப்பதாக கூறி, அதன் உரிமையாளரான மடிப்பாக்கம், ராம் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 60, என்பவர், வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள சாலைக்கு அழைத்து சென்றார். அங்கு பயற்சி அளிப்பது போல, பெண்ணிடம் அபாசமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டுள்ளார். உடனடியாக, அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் வந்த இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணை மீட்டு அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். இது குறித்த புகாரின்படி, மடிப்பாக்கம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கோபாலகிருஷ்ணன் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.