போதை ஆசாமி வெறிச்செயல் பிச்சைக்காரர் வெட்டிக்கொலை
சென்னை:மது போதையில் இருவரை வெட்டிய மர்ம நபர், ஆத்திரம் தீராமல் பிச்சைக்காரரை வெட்டிக் கொன்றார். சென்னை, மாதவரம், தபால் பெட்டி அருகே 'டாஸ்மாக்' கடை மற்றும் மதுக்கூடம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, இருவர் மது அருந்தி, வெளியே வந்தனர். அப்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்த, மது போதையில் காத்திருந்த மர்ம நபர், கையில் வைத்திருந்த கத்தியால், இருவரையும் வெட்டினார். இதில் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில், வெட்டு விழுந்தது. சுதாரித்த அவர்கள், மர்ம நபரை தள்ளிவிட்டு ரத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். தன்னிடம் இருந்து இருவரும் தப்பிச் சென்றதை தாங்க முடியாத மர்ம நபர், ஆத்திரம் தாங்காமல் அவ்வழியே சென்றோரை கத்தியால் வெட்ட முயன்றார். அப்போது, அங்கு நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவரை தாக்கி, அவரது தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினார். காயமடைந்த முதியவர், '108' ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த முதியவ ர், நேற்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், இறந்த முதியவர் ஆதரவற்ற பிச்சைக்காரர் என்பதும், கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகள் மூலம், மர்ம நபரை பிடித்த போலீசார், காவல் நிலையத்தில வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.