போலி ஆவணங்களுடன் ஆஜரான டுபாக்கூர் வக்கீல்கள் சிக்கினர்
பிராட்வே, :பார் கவுன்சிலில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, டுபாக்கூர் வக்கீல்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் கிரிதா செந்தில்குமார், உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கவிதா, 42. சேலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 57. இருவரும், டில்லி பார் கவுன்சிலில் 2020ல் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர்.பின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு மாற்றுவதற்காக, கடந்த ஏப்., 28ம் தேதி, இந்திய பார்கவுன்சிலில் விண்ணப்பம் செய்தனர்.இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை குறித்து, கடிதம் மூலம் கேட்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அலுவலர்கள், விண்ணப்பதாரர்கள் புதுடில்லியில் உள்ள குளோபல் பல்கலையில் சட்டப்படிப்பு முடித்ததாக சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை கண்டறிய, கடிதம் மூலம் அறிக்கை பெற்றனர்.அதில், கவிதா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் கல்வி சான்றிதழ்கள் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலி ஆவணங்கள் சமர்ப்பித்த கவிதா மற்றும் கிருஷ்ணமூர்த்தி மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசாரின் விசாரணையில், இருவரும் போலி வழக்கறிஞர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பார்கவுன்சில் அலுவலகத்தில் வைத்து இருவருரையும், நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டில்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.