மில்லிங் சாலையில் புழுதி மண்டலம் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல்
எம்.ஜி.ஆர். நகர்: கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர், அசோக் நகர், விருகம்பாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான பேருந்து வழித்தட சாலையாக, அண்ணா பிரதான சாலை உள்ளது.இருவழிப் பாதையாக உள்ள இச்சாலை, 1.3 கி.மீ., துாரம் மற்றும் இருபுறம், தலா 35 அடி அகலம் உடையது. இச்சாலையின் கீழ் செல்லும் கழிவுநீர் மற்றும் குடிநீர்குழாய் உடைப்பால், அடிக்கடி 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, 2.20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பாதையில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், தொடர்ந்து அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டன.அதன்பின், மாநகராட்சி பேருந்து சாலைகள் துறை சார்பில், 2022 மார்ச் மாதம் 2.27 கோடி ரூபாய் செலவில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்த நிலையில், அண்ணா பிரதான சாலையில் நெசப்பாக்கம் -- அசோக் நகர் பகுதியில் தார்ச் சாலை அமைக்க 'மில்லிங்' செய்யப்பட்டுள்ளது. மில்லிங் செய்த பின் சாலையை முறையாக சுத்தம் செய்யாததால், சாலை முழுதும் தார் கலவை துாள் படர்ந்து காட்சியளிக்கிறது.வாகனங்கள் செல்லும் போது, புழுதிமண்டலமாக மாறி விடுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது. மேலும் மூச்சுத்திணறலால் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பகுதிவாசிகள் கூறுகையில், நன்றாகஇருந்த சாலையை 'மில்லிங்' செய்துள்ளனர். இதனால், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.