இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பாலங்களை கண்காணிக்க 30 சிசிடிவி கேமரா
துரைப்பாக்கம், ஓ.எம்.ஆரில் -இருந்து இ.சி.ஆர்., இடையே, பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் குறுக்கே, பாண்டியன் நகர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, பாலவாக்கம் ஆகிய ஐந்து பகுதிகளில், சிறுபாலங்கள் உள்ளன.ஓ.எம்.ஆரில் இருந்து இ.சி.ஆர்., நோக்கி செல்வோர், துரித பயணத்திற்கு இந்த சிறுபாலங்களை பயன்படுத்துகின்றனர். அதேவேளையில், ஓ.எம்.ஆரில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் குற்றங்களில் ஈடுபட்டு, இந்த சிறுபாலங்கள் வழியாக இ.சி.ஆரில் உள்ள நீலாங்கரை காவல் நிலைய எல்லை வழியாக தப்பிச் செல்கின்றனர்.அதேபோல், நீலாங்கரையில் குற்றங்களில் ஈடுபட்டு, சிறுபாலங்கள் வழியாக, துரைப்பாக்கத்தில் இருந்து தப்பிக்கின்றனர்.இதனால், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதில் சிக்கல் நீடித்ததுடன், தாமதமும் ஏற்பட்டது. குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் வகையிலும், சிறு பாலங்கள் அமைந்துள்ள பகுதியில், கண்காணிப்பு கேமரா அமைக்க, போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி, பாலங்கள் துவங்கும் இடத்தில் துரைப்பாக்கம் காவல் நிலையமும், பாலம் முடியும் இடத்தில் நீலாங்கரை காவல் நிலையமும், கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு பாலத்திலும், ஆறு கேமராக்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், பாலம் இல்லாத பகுதியான பகிங்ஹாம் கால்வாயை, அருகில் உள்ள ராஜிவ் நகரை சுற்றி, 20 கேமராக்கள் அமைக்கப்பட்டன.இதன் வாயிலாக, இரு காவல் நிலைய எல்லையில் குற்றங்களை தடுக்க முடியும் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.