12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் முழுதும் பெற முயற்சி
சென்னை, நடப்பாண்டில் தமிழகத்திற்கு, 12 டி.எம்.சி., கிருஷ்ணாநீரை பெறுவதற்கான முயற்சியில், நீர்வளத் துறையினர் இறங்கியுள்ளனர். தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த நீரை வைத்து, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணா நீரை கொண்டு வர, கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயை ஆந்திரா மற்றும் தமிழக நீர்வளத்துறையினர் தனித்தனியாக பராமரித்து வருகின்றனர். ஆந்திரா எல்லையில் உள்ள கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும், 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், முறைப்படி ஆந்திர அரசு நீரை திறப்பது இல்லை. கடந்த 2024 - 25ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், தமிழகத்திற்கு 3.59 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்தது. நடப்பு 2025 - 26ம் ஆண்டு தவணைக்காலத்தில் இதுவரை, 1.04 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி தமிழகத்தின் ஜீரோ பாயின்ட் எல்லையை கடந்து விநாடிக்கு, 336 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. ஜூலை முதல் அக்டோபர் வரை, 8 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும். மீதமுள்ள மாதங்களில் முழுமையாக நீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில், கடந்தாண்டு அதிகளவில் நீர் கையிருப்பு இருந்தது. இதை காரணம் காட்டி, முறைப்படி நீர் வழங்காமல், ஆந்திர நீர்வளத்துறையினர் ஏமாற்றிவிட்டனர். நடப்பாண்டு, முழுமையாக நீர் பெற இருதரப்பிலும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, தனியாக ஒரு செயற்பொறியாளரை அனுப்பி, ஆந்திர நீர்வளத்துறையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நீர்வளத்துறை செயலர் மட்டத்திலான அதிகாரிகளும், தேவைப்பட்டால், ஆந்திரா சென்று பேச்சு நடத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.