நந்தம்பாக்கம் ரிவர் சாலைக்கு ரூ.30 லட்சத்தில் மின் விளக்கு
நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை- - பூந்தமல்லி சாலையில் பிரிந்து, மணப்பாக்கம், முகலிவாக்கம் வழியாக, குன்றத்துார் பிரதான சாலையை அடையும் நெடுஞ்சாலை, போக்குவரத்து நிறைந்தது.இச்சாலையை ஒட்டி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடியிருப்பு, பள்ளிகள், திருமண மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தினமும், பல்லாயிரக்கணக்கானோர் இச்சாலையில் பயணிக்கின்றனர். மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், இச்சாலையில் நந்தம்பாக்கம் பகுதியில் மையத்தடுப்புடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, சாலையோரம் இருந்த மின் விளக்குகள் அகற்றப்பட்டன.அதனால், பரங்கிமலை- - பூந்தமல்லி சாலை முதல் அம்பேத்கர் நகர் பிரதான சாலை வரை, ரிவர் சாலையில், பல மாதங்களாக மின்விளக்கு வசதியின்றி இருந்தது.இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில், 50 எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தும் பணிக்கு, நேற்று பூமி பூஜை போடப்பட்டது.மண்டல குழு தலைவர் சந்திரன் கூறியதாவது:மின் விளக்குககள் அமைக்க வேண்டிய பணி மாநகராட்சியினுடையது என்றாலும், பழைய மின் கம்பங்களை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை, உரிய நிதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்க காலதாமதம் ஆனது.தற்போது அந்த நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 30 லட்சம் ரூபாயில் சாலையின் இருபுறமும் தலா 25 மின் விளக்குகள் என, 50 எல்.இ.டி., மின் விளக்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.அடுத்த இரண்டு மாதங்களில், இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.