இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்
சென்னை: அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பதற்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த மே 7ல் துவங்கி, ஜூன் 9ல் நிறைவடைந்தது. ஜூன் 11ல், 'ரேண்டம் எண்' வழங்கப்பட்டு, 20ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. கடந்த, 27ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களில், 2 லட்சத்து 39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2,342 பேர் தொழில் கல்வியின் கீழும் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 144 பேர், 'கட் ஆப்' மதிப்பெண்ணில், 200க்கு 200 பெற்றிருந்தனர். அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற, 445 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களான, 2 லட்சம் பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று துவங்க உள்ளது. இன்றும், நாளையும், அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு, 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறையில் நடக்கிறது. வரும் 9, 10 ,11ம் தேதிகளில், பொதுப்பிரிவில் சிறப்பு பிரிவான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடக்கும். இதன்பின், அரசு பள்ளிகளில் படித்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், 14 முதல் 19ம் தேதி வரை நடக்கும். அடுத்த மாதம், 21 முதல் 23ம் தேதி வரை, துணை கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறையில் நடக்கும். எஸ்.சி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கான கவுன்சிலிங், அடுத்த மாதம் 25, 26ம் தேதிகளில் நடக்கும். அன்றுடன் கவுன்சிலிங் முடியும்.