மேலும் செய்திகள்
தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி
18-Jul-2025
சென்னை:காலநிலை வீரர்கள் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட, 50 மின் ஆட்டோக்கள், நான்கு மாதங்களாக சென்னையின் பல்வேறு பகுதியில், பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், காலநிலை வீரர்கள் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா, 4.80 லட்சம் ரூபாயில், 50 மின் ஆட்டோக்களை, துணை முதல்வர் உதயநிதி, மார்ச் மாதம் வழங்கினார். காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்கள் பயன்பாடு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை விற்பனை செய்வது திட்டத்தின் நோக்கம். மின் ஆட்டோக்களுக்கு, 'சார்ஜ்' செய்வதற்கு உரிய வசதிகளை செய்து தராததால், பெரும்பாலானோர் ஆட்டோக்களை இயக்காமல், சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி தபால் அலுவலகம் அருகே நான்கு ஆட்டோக்கள்; வாலாஜா சாலையில் இரண்டு; திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒன்று; ராயப்பேட்டையில் ஐந்து; ஒயிட்ஸ் சாலையில் ஒன்று உட்பட, 2-0க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், பல மாதங்களாக ஒரே இடத்தில் முடக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் பழுதடைந்த நிலையிலும், சிலரது ஆட்டோவின் முன்புற கண்ணாடி சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், முடங்கியுள்ள ஆட்டோக்களை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ் ஹவுஸை சேர்ந்த சமூக ஆர்வலர் பானுமதி கூறியதாவது: ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதியில், இந்த ஆட்டோக்கள் பல மாதங்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சார்ஜ் செய்ய வசதி இல்லை என, மகளிர் குழுவினர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அரசை சாடாமல், சென்னையில் சார்ஜ் செய்வதற்கு உள்ள இடங்களை பயன்படுத்தி கொள்ளலாம். அது தெரிந்தும், ஆட்டோக்களை இயக்காமல் மகளிர் குழுவினர் உள்ளனர். இதில், ஏதோ குழப்பம் உள்ளன. அதிகாரிகள் விசாரித்து, முடங்கியுள்ள ஆட்டோக்களை இயக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை பறிமுதல்செய்து, ஆர்வமுள்ள மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
18-Jul-2025