பள்ளிக்கரணைக்கு யுரேஷிய குயில் வருகை
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பின், 'யுரேஷிய குயில்' வந்துள்ளது, கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதிக்கு, 202 வகையான பறவைகளின் வருகை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், யுரேஷிய குயில்கள் தற்போது தமிழகம் வர துவங்கியுள்ளன. சென்னையில் அடையாறு முகத்துவாரம் மற்றும் பட்டினப்பாக்கத்தில் இதன் நடமாட்டம் உள்ளது. இதற்கு முன், 2020ல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், யுரேஷிய குயில்கள் வருகை பதிவானது. இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: ஐரோப்பா, ஆசியாவில் மங்கோலியா, மியான்மர் நாடுகளில், இந்த குயில்கள் பரவலாக காணப்படும். குளிர் காலத்தில் உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இவை வருகின்றன. இவை மீண்டும் பள்ளிக்கரணைக்கு வந்துள்ளது, இப்பகுதியின் சூழல் தன்மை நல்ல முறையில் உள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.