கண்ணகி நகரில் சிறப்பு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி
கண்ணகி நகர் : கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,042 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், 10, 11, 12ம் வகுப்பில், 418 பேர் உள்ளனர்.சில ஆண்டுகளில், உடல் பாதிப்பு, தேர்வு பயம், குடும்ப சூழல் போன்ற காரணங்களால், இடைநிற்றல் மாணவர்கள் அதிகரித்தனர்.இடைநிற்றல் இல்லாமல் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்யவும், அனைவரும் பட்டப்படிப்பு உள்ளிட்ட மேல்படிப்பு படிக்கவும், முதல் தலைமுறை கற்றல் மையம் முடிவு செய்தது.இதற்காக, மாலையில் சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்து, அப்போது சிற்றுண்டி வழங்க முன் வந்தது. இதை, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, நேற்று பள்ளியில் துவக்கி வைத்தார்.அதோடு, கல்வி வழிகாட்டி புத்தகமாக, அச்சம் தவிர் என்ற நுாலை, அனைத்து மாணவ - மாணவியருக்கும் வழங்கினார்.முதல் தலைமுறை கற்றல் மைய நிர்வாகி மாரிச்சாமி கூறியதாவது:எட்டு ஆண்டுகளாக எடுத்த முயற்சியில், கண்ணகி நகரில் பட்டதாரிகள் அதிகரித்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளியில் கவனம் செலுத்த முடிவு செய்தோம். இதற்காக, 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பள்ளியிலேயே மாலை 4:30 முதல் 5:30 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, சிற்றுண்டி வழங்குகிறோம். காராமணி, மொச்சை பயறு, பச்சை பயறு, வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றில், தினமும் எதாவது ஒரு தானிய வகையில், ஒரு நபருக்கு 60 கிராம் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கு, தினமும் 5,000 ரூபாய் செலவாகிறது. தேர்வுக்காக சிறப்பு வகுப்பு நடைபெறும் நாட்கள் வரை வழங்கப்படும். இதன் வாயிலாக, அவர்கள் உடல் நலன் ஆரோக்கியமடைவதுடன், தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.