அண்ணா பல்கலை மாணவியை மிரட்டிய மாஜி காதலன் கைது
சென்னை, பழகியபோது எடுத்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக, அண்ணா பல்கலை மாணவியை மிரட்டியவரை, கோட்டூர்புரம் போலீசார் நேற்று கைது செய்தனர். அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் முதுகலை படித்து வரும், 20 வயது மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில், சென்னையில் உள்ள பிரபல கல்லுாரியில், 2020 - 2024 வரை, நானும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார், 21, என்பவரும் ஒன்றாக படித்தோம்.அப்போது, காதல் ஏற்பட்டது. அதன்பின் மேல்படிப்பு படிப்பதற்காக அண்ணா பல்கலையில் சேர்ந்தேன். ராம்குமார் புனேவில் வேலைக்காக சென்றுவிட்டார்.பின் அவரது நடவடிக்கை, பழக்கவழக்கம் பிடிக்காமல் பிரிந்துவிட்டேன். இதனால் என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், நேற்று ராம்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தந்தை மின்வாரியத்தில் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.