சிறப்பான பணி: இரு இன்ஸ்பெக்டர்களை வெகுமதி அளித்து பாராட்டிய கமிஷனர்
சென்னை, சிறப்பாக பணியாற்றி, கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, ஆயுள் தண்டனை கிடைக்க செய்த, இரண்டு இன்ஸ்பெக்டர்களை, கமிஷனர் அருண் நேற்று அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.மயிலாப்பூர், பி.என்.கே.,கார்டன், 6வது தெருவைச் சேர்ந்தவர் கபாலி, 38. கடந்த, 2021 மார்ச், 26ல் கொலை செய்யப்பட்டார். மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையில் ஈடுபட்ட கபாலியின் மனைவி வனிதா, 35, அவரது சகோதரர் சாந்தகுமார், 42 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இவ்வழக்கு தொடர்பாக ஆதாரங்களையும், ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினர், 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தனர். விசாரணை முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகள் இருவருக்கும், ஆயுள் தண்டனை விதித்து, கடந்த 8 ம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.திருவான்மியூர்திருவான்மியூர் குப்பம், வேம்புலியம்மன் கோவில் அருகே, 2022 ஏப், 30ல், அருண், 22, அவரது நண்பர் சதீஷ்குமார் ஆகிய இருவரும், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, திருவான்மியூர் குப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 24 என்பவரை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை 17 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, கொலை குற்றவாளி தினேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.சிறப்பாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்த இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சி சுந்தரம், ராமசுந்தரம் ஆகிய இருவரையும், கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார். மீனாட்சி சுந்தரம் தற்போது அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளராகவும், ராமசுந்தரம் கோட்டூர்புரம் ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றனர்.