காலாவதி பால்கோவா ஆவினில் விற்பனை?
ராயபுரத்தை சேர்ந்தவர் செந்தில். இவர், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள 'ஆவின்' பாலகத்தில், 'பால்கோவா' வாங்கினார். வீட்டிற்கு சென்று பால்கோவாவை பிரித்து, குடும்பத்துடன் சுவைத்தனர். பாதி சுவைத்த நிலையில், தற்செயலாக பால்கோவா இருந்த டப்பாவின் மூடியில் தேதியை பார்த்தனர். அதில், தயாரிப்பு தேதி ஜூலை 15 எனவும், காலாவதி தேதி ஜூலை 21 எனவும் பதிவாகி இருந்தது. காலாவதியாகி, 15 நாட்களுக்குப் பிறகும் பால்கோவா விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால், உடல் உபாதைகள் ஏற்படுமோ என, அச்சம் அடைந்தனர். மேலும், பால்கோவா பாக்கெட்டில் காலாவதி தேதி குறித்த விபரத்தை புகைப்படம் எடுத்த செந்தில், அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளதாக செந்தில் தெரிவித்தார்.